ஆண்மையைப் பறிக்கும் செல்போன்கள்!
மொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.
கொடிய நோய்கள்...
செல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.
மேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள் பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை. செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.
ஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.
அதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
மத்திய நிபுணர் குழு
இந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்பு துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. இதன்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.
செல்போன் டவர்களின் மின்காந்த அலைவரிசை கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்த வரையறை நிர்ணயிக்க வேண்டும்... என பரிந்துரைத்துள்ளது. மேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
செல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது. மேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.
அதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக்கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.
இவற்றை ஒரேடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1887ஐ’ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.
மக்களுக்கு எச்சரிக்கை....
இந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன. குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்... அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.
மற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம். உடனே ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜவஹகர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை :
மொபைல் போன்களில் கதிரியக்கம் குறித்த இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான். இதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
இதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.
No comments:
Post a Comment