அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? ? ( al quran -4:54)
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்திருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது .அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மதங்கள் மொழிகள் காலங்கள் வேறுபாடு கிடையாது.
அடுத்தவர் நன்றாய் வாழ்ந்தால்
அடுத்தவர் நல்ல உடை உடுத்தினால் அடுத்தவர் உயரமாய் இருந்தால் அடுத்தவர் கணவர் பொருத்தமாய் இருந்தால் அடுத்த வீட்டு பெண் வசதியாய் இருந்தால் பொறாமை
யார் எப்படி பொறாமைப்படுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. முதலில் பொறாமையின் தன்மையை நாம் ஆராய முற்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ தான் 200 ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழப்போவதாகவும், அதனால் தான் நினைத்த காரியம் நடத்திக்காட்டி, தான் பெரியவன் என்று உலகத்தார் மூக்கின் மேல் விரல் வைக்குமாறு காட்டப் போகிறேன் என்று எண்ணத்தில் நான்தான் எல்லாரையும் விட சிறப்பாக இருக்க வேண்டும், என்னைவிட அதிக குணநலன்கள் உடையவனை எனக்கு பிடிக்காது. என் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களை வெறுக்கிறேன். அவர்களை எப்படியாவது கஷ்டப்பட வைத்து அதைக் கண்டு ஆனந்தம் அடையப்போகிறேன்! என்று மனக்கணக்குகள் போடுகிறான்.
இதில், அடுத்தவரைப் பார்த்து ஏங்குவதும் பெருமூச்சு விடுவதும் அவர்களது உயர்வு கண்டு உள்ளம் புழுங்குவதும் பொறாமை எனப்படுகிறது.
பெரும்பாலும் இந்த பொறாமை தனக்கு நிகரான ஒருவர் மீதே எற்படுகிறது. பிச்சைக்காரன் ஒருவன் பில்கேட்ஸைப் பார்த்து, ‘அவ்வளவு செல்வம் நம்மிடம் இல்லையே!’ என்று பொறா மைப்படுவதில்லை. அதே நேரம், தன்னுடன் ஒரே மரத்தடியில் உறங்கும் சக பிச்சைக்காரனுக்கு, தன்னை விட அதிகம் பிச்சை கிடைத்துவிட்டால், அவன் மேல் பொறாமை வருகிறது.
பொறாமை கொள்வது:
அருளாளன் அல்லாஹ்வின் அநுக்கிரகம் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானது. அறிவு, புலமை, செல்வம், மதிப்பு, செல்வாக்கு, அந்தஸ்து, பதவி என எல்லாமே அளவில் வித்தியாசமானவை. இது அல்லாஹ்வின் ஏற்பாடு. அது மாறாதது. மாற்ற முடியாதது. எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு கிடைத் துள்ள அருட்கொடைகளை பெரிதாக மதித்து, திருப்தியுற்று, நன்றி செலுத்தி வாழ வேண்டும்.
தனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும்பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது.
ஈமானும், பொறாமையும் ஒரு உள்ளத்தில் ஒன்றாக இருக்க முடியாது. சிலர் எல்லை மீறி அயலவருக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கூட கெடுக்க முற்படுவர். மற்றும் சிலர் கோல்ச் சொல்லித் திருமணங்களையும், கொடுக்கல்-வாங்கல்களையும் தடுத்து விடுவர். பொறாமை கொள்வதும், அதன் அடிப்படையில் செயற்படுவதும் ஹறாமாகும். எனவேபொறாமையைத் தவிர்த்தல் வேண்டும். அதிலும் குறிப்பாக அயலவர் மீதுபொறாமை கொள்வது கடுமையான ஹறாமாகும்.
ஒருமுறை லொட்டரி அதிபர் ஒருவரிடம்,
“ஒருகோடி இரண்டு கோடி என்று பெரிய பரிசுத் தொகை எவரோ ஒருவருக்கு- ஏதோ ஒரு எண்ணுக்கு பரிசு விழுகிறது. பரிசு கிடைக்கும் எண்ணுக்கு, முன்னால் உள்ள அல்லது அடுத்து வரும் எண்ணைக் கொண்ட சீட்டை வாங்கியவர்கள் மனம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா?” என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு லொட்டரி அதிபர் சொன்ன பதில் சிந்திக்க வைப்பது. அவர் சொன்னார். ‘500 என்ற எண் கொண்ட சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். ‘499-ம் எண்’ சீட்டை வாங்கியவரும், ‘501-ம் எண்’ சீட்டை வாங்கியவரும்... பெரிதாக மனம் பாதிக்கப்படுவதில்லை. ‘ஐயோ... ஒரு நம்பரில் போய் விட்டதே!’ என்று சலித்துக் கொள்வதோடு சரி. ஆனால், பரிசு பெற்றவரின் இடப்புற வீட்டுக்காரரும், வலப் புற வீட்டுக்காரரும்தான் அதிகம் மன உளைச்சல் அடைகிறார்கள்!’என்றார். நேற்று வரை, தன்னைப் போல மாதக் கடைசியில் திண்டா டிய ஒருவன், திடீரென கோடீஸ்வரன் ஆவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்¨. இதுதான் பொறாமை என்பது!
அடுத்தவர் வளத்தைக் கண்டு வாயூறுவது இயல்பாகவே பொறாமைக்கு இட்டுச் செல்லும், இதனால் தான் அல்லாஹ்தஆலா இதனைத் தடுத்தான். அல்-குர்ஆன் கூறுகிறது, ‘இன்னும் அல்லாஹ் உங்களில் சிலரைவிட எதனைக் கொண்டு மேன்மை யாக்கி வைத்துள்ளானோ அதனை நீங்கள் ஆசைப்படாதீர்கள்!’ (04 : 32)
ஒருவரிடமுள்ள அருட்கொடை அவரி டமிருந்து இல்லாது போக வேண்டுமென அவாவுறுவது பொறாமையாகும். தன்னிட முள்ள இறை அநுக்கிரகங்களை குறைத்து மதிப்பிடுவது, பிறரிடமுள்ள அநுக்கிரகங்கள் மீது ஆசை வைப்பது, பகைமை, விவாதம், பெருமை, பதவி மோகம்,, தலைமைத்துவ வன்மூச்சு, கெட்ட எண்ணம், கையாலாகாத்தனம் போன்றவை மனித உள்ளங்களில் இலகுவில் பொறாமையை விதைத்து விடுகின்றன.
வயிற்றெரிச்சல் ஒரு பொல்லாத நோய. ஆன்மீக வறுமையின் வெளிப்பாடு. இஸ்லாம் இதனைத் தடுத்துள்ளது. மனிதன் படாத பாடுபட்டு புரிகின்ற நல்ல காரியங்களையும் கூட அழித்தொழித்து விடும். பின்வரும் ஹதீஸ் இதனை விளக்குகிறது.
‘பொறாமையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பது போல் நிச்சயமாக பொறாமை நற் செயல்களைத் தின்று விடுகிறது.’ (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : ஸ¤னன் அபீ தாவூத்)
பொறாமைக் கண் மிகக் கெட்டது. இதனால் தான் பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு ரஸ¤ல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அல்லாஹ் பணித்தான். ‘மேலும் பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் அவன் பொறாமைகொள்ளும் போது (நான் பாதுகாவல்) கோருகிறேன்)’ (அல்-குர்ஆன் – 113 : 05)
‘அல்லது மனிதர்களை அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ளவற்றின் மீது அவர்கள் பொறாமைப்படுகிறார்களா?’ (அல்-குர்ஆன் – 04 : 04) என அல்லாஹ் கேட்பது இந்த வகையில்தான்.
அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ‘மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமைகொள்ள வேண்டாம்’ என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹ்) நூல் : சஹீஹ் அல் – புகாரி)
பிறரின் முன்னேற்றத்தைக் கண்டு வயிறெரிவோர் பலர் உள்ளனர். அவர் அந்நிலையை எய்துவதற்கு என்னென்ன பாடுகள் பட்டிருப்பார், எப்படி எப்படியெல்லாம் எத்தனங்கள் செய்திருப்பார் என ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. தனது முன்னேற்றத்துக்காக முயன்றிடுவதுமில்லை. சோம்பேறியாக, ஓட்டாண்டியாக இருந்து கொண்டு அடுத்தவரின் வளர்ச்சியை மனப்புழுக்கத்துடன் பார்ப்பது இவர்களின் வாடிக்கை.
அடுத்தவரின் உயர்வை, உய்வைப் பொறுத்துக்கொள்ளாத சிலர் அவரின் தொடர் வளர்ச்சியைத் தடுக்கவும், அவரின் முனைவுகளுக்கு முட்டுக்கட்டைப் போடவும், அவரது வழியில் குறுக்கே நிற்கவும் தயங்குவதில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று அவரின் உடமைகளுக்கு, உடம்புக்கு, உயிருக்கு, நற்பெயருக்கு உலைவைத்தும் விடுகின்றனர். இவை பொறாமையின் அதி உச்ச தீய விளைவுகள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்று சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும் பரவியுள்ளது. வெறுப்பு என்பது மத்துவிடக்கூடியது. நான் முடியை மப்பதை சொல்லவில்லை மார்க்கத்தை மத்து விடும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை ஒருவர் நேசம் கொள்கின்றவரை நீங்கள் நம்பிக்கையாளராகமாட்டீர்கள். எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்களோ அதை பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் சொல்லுவதை பரப்புங்கள்! அறிவிப்பவர்:அஸ்ஸ‚பைர்(ர) நூல் : அஹ்மது 1338 .இந்த பொறாமையையோடு வெறுப்பையும் சேர்த்து ஒரு நோயாகவும் தலையில் உள்ள முடிகளை மக்கக்கூடியதை போன்று மார்க்கத்தை அழித்துவடக்கூடியதாக கூறுகிறார்கள்.பொறாமை மனதில் இருந்தால் வெறுப்பும் சேர்ந்து வந்துவிடும். இதனால் தான் நண்பர்கள் என்ற உறவு முறிகிறது. மக்களுக்கு நற்பணியாற்றிய இயக்கங்கள் காணமால் போகிறது. ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளத்தை பார்த்து பொறாமைப்பட்டு அந்நாட்டை அபகரிப்பதற்காக பக்கத்து நாடு போர் தொடுக்கிறது. கடந்த காலங்களில் உலகை உலுக்கிய உலகப்போர்கள் இதனால் தான் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்தது. இந்த பொறாமை என்பது பிரிவினை வெறுப்பை மட்டும் ஏற்படுத்தாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று மார்க்கத்தை மக்கக்கூடிய கூர்மையான கத்தியைப்போன்று மனித உயிர்களையும் ப கொண்டும் விடும். இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது. இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: (முஹம்மதே) ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்தியை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக! அவ்விருவரும் இறைவனுக்கு நேர்ச்சை செய்தனர். அவர்களில் ஒருவருடைய நேர்ச்சை மட்டும் ஏற்பட்டுக் கொள்ளப்பட்டது.இன்னொருவரின் நேர்ச்சை ஏற்கபடவில்லை.(ஏற்கப்படாதவர்) நான் உன்னை கொன்று விடுவேன்.என்று சொன்னார். (ஏற்றுக் கொள்ளபட்டவர்) அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களிடமிருந்து தான் நேர்ச்சையை அவன் ஏற்கிறான். நீ என்னை கொள்வதற்காக உன்கையை என்னிடத்தில் நீட்டினாலும் நான் உன்னை கொள்வதற்காக என் கையை உன்னிடத்தில் நீட்டமாட்டேன்.அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வை பயப்படுகிறேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாகுவாய் என்று தான் நினைக்கிறேன்.அது தான் அநீதி இழைத்தோரின் கூ. அவரது உள்ளம் அவனது சகோதரரை கொள்வதற்கு அவருக்கு அலங்கரித்துக் காட்டியது. அவர் அவரைக் கொன்று நஷ்டவாளியானார்.(அல் குர்ஆன் 5:27முதல் 30வரை) தன்னுடைய நேர்ச்சை ஏற்றுக் கொள்ளப்படதாதற்கு தன்னுடைய இறையச்சத்தில் ஏற்பட்ட குறைபாடு என்று புரிந்து கொள்ளாமல் தன் கூட பிறந்த சகோதரர் என்று பார்க்காமல் அவனுக்கு மட்டும் ஏன் நேர்ச்சை அங்கீரிக்கப்பட்டது. என்ற பொறாமையால் அவரை கொலை செய்கிறார். இது மனித இனத்தில் நடந்த முதல் கொலை குற்றம். அன்று ஏற்பட்ட அந்த பொறாமை இன்றும் பல உயிர்கள் போவதற்கு காரணமாக உள்ளது. அன்று ஏற்பட்ட இந்த கொடிய நம்மையும் தொற்றிக் கொண்டே வருகிறது. அப்படியென்றால் அறவே பொறாமைபடக் கூடாதா ? நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சில விஷயங்களில் பொறாமை பட அனுமதியளித்துள்ளார்களே என்று நம் மனதிற்குள் கேள்வி எழலாம். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்) அறிவிப்பவர்:இப்னுஉமர்(ர) நூல்: புகாரி 5025
இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறாமை கொள்வது அனுமதியைப் போன்று கூறியுள்ளார்கள். அது போல பொறாமையைக் குறிக்கின்ற ஹஸத் என்ற வார்த்தைக்கு மற்றவர்களுக்குள்ள சிறப்பை அவர்களிடமிருந்து நீக்குவதற்கு நாடுவது என்று ஸானுல் அரபு போன்ற ஆதாரப்பூர்வமான அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நபியவர்கள் இந்த பொறாமையை கூறவில்லை. நன்மையான காரியங்களில் போட்டி போட்டு நாமும் அந்த நன்மையை செய்ய வேண்டும் என்பதை தான் கூறுகிறார்கள். இது இன்னொரு அறிவிப்பில் (புகாரி 5026) மார்க்க ஞானம் செல்வம் வழங்கப்பட்டவர் செய்யும் நற்செயல்களை கேள்விபட்ட அவருடைய அண்டை வீட்டுக்காரர் இவரைப் போன்று நமக்கும் இருந்தால் நாம் இன்னென்ன நன்மைகள் எல்லாம் செய்திருக்கலாமே என்று நன்மையான காரியத்திற்கு ஆதங்கப்படக்கூடியவர். என்று வருகிறது. இதைத் தான் நபித்தோழர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களில் தெரிந்துகொள்ளலாம். முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா?அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்து ல்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்:அபூ ஹ‚ரைரா(ர) நூல்:முஸ்ம்936 (மற்ற அறிவிப்புகளில் வெவ்வேறு எண்ணிக்கையுடைய செய்திகளும் ஆதரப்பூர்வமாகவருகிறது)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நபித்தோழர்கள் பதவிக்கோ பொருளுக்கோ போட்டி போடவில்லை. நாம் ஏழ்மைநிலையில் இருப்பதனால் பொருளாதாரரீதியான நன்மைகளை செய்ய முடியவில்லையே ஆனால் பணக்காரர்கள் வணக்கவழிபாட்டிலும் பொருளாதாரத்திலும் சேர்த்து இரட்டிப்பு கூகளை அடைகிறார்களே என்று அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் கவலைப்பட்டு தானும் அந்த நன்மைகளை அடையவேண்டும் என்ற நோக்கில் கேட்கிறார்கள். இப்படி தான் அனைத்து நபித்தோழர்களின் வாழ்க்கையும் இருந்தது. இது போன்ற அவர்களின் வாழ்நாளில் ஏராளமான சம்பவங்களை காணலாம். இப்படியில்லமால் அல்லாஹ்வின் பாதையில் செயலாற்றுவதற்காக ஒன்று சேர்ந்திருக்கக்கூடிய நமது ஜமாஅத்தில் ஒருவர் பொருளாதார உதவிகளை மற்றவர்களைவிடவும் அதிகமாக செய்வார்.ஒருவர் அறிவு சார்ந்த உதவிகளை செய்வார்.இன்னொருவர் உடல் உழைப்பை செய்வார். இதனால் மற்றவர்கள் பொறாமை கொண்டு இவருக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்தி இவரை நீக்கி விட்டு நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இது தான் ஷைத்தான் தூக்கியெறியப்பட்டதற்கான காரணம்
அதிகபட்சம் 60 வருடங்கள் வாழங்கூடி உலகத்தில் அறிவு பொருளாதாரம் குறைந்திருந்தால் என்ன? இங்கே என்ன நடந்தாலும் மறு உலகத்தில் தான் நாம் நிலையாக இருக்கப்போகிறோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.
இன்னும் அல்லாஹ் தான் விரும்பியவருக்கு அருட்கொடையை வழங்குவதாக கூறுகிறான்.அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான் (அல்குர்ஆன்5:54)
இந்த அருட்கொடை வழங்குதல் அல்லாஹ்வின் அதிகாரம். இதை பார்த்து பொறாமை கொண்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதுபோன்றுதாகிவிடும்.
இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்
எங்கள் இறைவா எங்களையும் எங்களுக்கு முன்னால் நம்பிகொண்டவர்களையும் மன்னிப்பாயாக! எங்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை கொண்டோருக்கெதிராக பொறாமையை ஏற்படுத்திவிடாதே . நீயே மன்னிப்பவன் கருணையாளன் (அல் குர்ஆன் 59:10)
இது நபித்தோழர்கள் செய்த பிராத்தனையாக குறிப்பிடுகிறான்.
அல்லாஹவின் அருட்கொடை வழங்கப்பட்டவர்கள் பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும் படியும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பொறாமைகாரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். (அல் குர்ஆன் 113:5)
பொறாமைக்காரனின் தீங்கு என்றவுடன் ஒருவர் பொறாமைபட்டாலே நமக்கு கெடுதல் வந்துவிடாது. அவன் நம்மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாக அவன் நமக்கு செய்யும் தீங்கைதான் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் நாம் நினைத்தாலே ஒரு காரியம் நடக்கும் என்றால் அல்லாஹ்வின் தன்மை நமக்கு இருக்கிறது என்று சொன்னதைப் போன்றதாகிவிடும்
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் உமது இறைவன் நினைத்ததை செய்பவன் (அல் குர்ஆன் 11:107) நினைத்ததனைத்தும் நடக்கவென்றுமென்றால் அது அல்லாஹ்வால் மட்டுமே முடியும். இன்னும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் (முஹம்மதே!) சொல்வீராக உமது இறைவன் நாடியதை தவிர வேறொன்றும் எங்களுக்கு அணுகாது. (அல் குர்ஆன் 9:51) எனவே நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்தில் வருகிறது. என்று இருக்கும் போது யாரும் நினைத்தாலும் எந்த தீங்கும் நம்மையடையாது. இத்தகைய பொறாமை எண்ணத்தை நம் உள்ளத்தில் அகற்றி ஈருலுகிலும் நன்மையடைவோமாக இந்தப் பொறாமை சமுதாயத்தைச் சீரழிக்கும் கொடிய நோயா கவும் இருக்கிறது. அன்பு கொண்டு பழக முடியாமல், மனிதர்க ளுக்கிடையே குறுக்குச் சுவர்களை உண்டு பண்ணுகிறது. பஞ்சுக்கள் வைத்த தீ புகைந்து எரிவது போல், நெஞ்சுக்குள் பொறாமை புகைந்து எரிகிறது. நன்றாகச் சாப்பிட்டு,நன்றாக உடுத்திக்கொண்டு,கண்ணுக்கு குளிர்ச்சியாக வாழ்பவரைக் காணும்போதெல்லாம், ‘இவனுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா?’ என்று பெட்டிப்பாம்பாக பெருமூச்சு விட்டு, விட்டு இளைத்துப் போகிறான் பொறாமைக்காரன்! இரவு-பகல் பாராமல் உழைத்து எவ்வளவோ சுகங்களைத் தியாகம் செய்து, ஒருவன் உயர்கிறான். ஆனாலும் அவனது உழைப்பு அவனை உயர்த்தியதாக எத்தனை பேர் பேசிக் கொள்கி றார்கள்? அவனுக்கு ஏதோ புதையல் கிடைத்து விட்டது என்று நம்புகிறார்கள்.தகாத வழியில் சம்பாதிப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள். பேச்சாளர், மற் றொரு பேச்சாளரை எற்றுக் கொள்வதைக் கண்டிருக்கிர்களா? வியாபாரி ஒருவர், சக வியாபாரிகளைப் புகழ்வது உண்டா? இவையெல்லாம் இங்கே அபூர்வம். பொறாமை கொண்ட உலகில், எவரும் எவரையும் போற்றுவது இல்லை. அதனால் தான்.. மிகச் சிறந்த நபருக்கும் கூட செத்த பிறகே அங்கீகாரம் கொடுக்கிறது இந்த ஊர். வாழும்போது ஒருவனை பொறாமை கொண்டு புறம் பேசும்ஊர்... செத்த பிறகு அவனது புகழைப் பேசுகிறது. இத்தகைய குணமிருந்தால், அதை விட்டுவிட வேண்டும். இதயம் அன்பினால், அமைதியும் குளிர்ச்சியும் அடையும். அந்த அமைதியும் குளிர்ச்சியும் உள்ள மனமே ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றது. பொறாமை எனும் அழுக்கு மட்டும் மனதில் இல்லையெனில் மனம், மேகம் போல மெல்லியதாக மிதக்கும், பொறா மைக்காரனின் மனம், புகை மண்டும் வீடாக இருக்கிறது. இதற்குள் வசிக்கும் ஜீவனது மூச்சுத் திணறுகிறது. இந்த உலக வாழ்க்கை இன்பமாகத் தோன்ற வேண்டும் எனில், பொறாமையை அழிக்க முயற்சிக்க வேண்டும். பொறாமைக்காரனின் வாழ்க்கை உடுப்பதற்கும் உண்பதற்கும் கூட முடியாத வறுமையில் அழியும் என்று வள்ளுவர் எச் சரிக்கிறார். பொறுமை கொள்பவரது வாழ்க்கையை அதன் சிறப்பை நினைத்துப் பார்ப்பதன் மூலம்... பொறாமை குறையும். இந்த உலகில் எது எது சிறப்பானதாக கருதப்படுகிறதோ, அவை அனைத்தும் நிலையில்லாதது தான். அழகு- உடல் விட்டு உடல் தாவி விடும். செல்வம்- ஆள் விட்டு ஆள் மாறி விடும். செங்கோல்-கை விட்டு கை மாறும். ஆம், புதைத்த பிணம் மக்கிப் போகும் முன்பே, அடுத்த பிணத்தை அந்த இடத்தில் புதைக்கும் இந்த உலகில், எதுவும் நிலையில்லை! ஆக... நிலையற்ற செல்வங்களைக் கண்டு ஏங்குவதே பேதமைதான். இதில் அந்தச் செல்வம் அடுத்தவனுக்குக் கிடைத்து விடக் கூடாது என்று நினைப்பவன் பேதைக்கும் பேதை. எனவே பொறாமை எனும் தீய குணத்தை முற்றிலும் அகற்ற வேண்டும் பொறாமைக்காரனைத் தெய்வம் அழிப்பதில்லை. அவனது பொறாமையே அவனை அழித்துவிடும்! நீங்கள் அடுத்தவரைப் போல் துண்டில் வாங்கலாம். நீங்களும் அதே நதியில் தூண்டில் வீசலாம். ஆனால், அந்தத் தூண்டிலில்... மீன் விழுவதும் விழாததும் உங்கள் கையில் இல்லை. இதைப் புரிந்து கொள்வோம்.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.
யானைப்படை அழிந்த வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள கஃபாவானது அரபியர்களிடம் விசேஷ மதிப்பு பெற்றிருந்தது பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.
அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது காலத்திக்குப்பின் அந்தக் கோவிலும் தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில் மக்காவாசியே தீ வைத்ததாக தெரிந்தது. இவ்விரு சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.
கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய இடையூறும் விளைவிக்கப் போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாயும் முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபைத் தவிர்த்து பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் நகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.
அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும்
அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விசயத்தைத்தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.
கரு நிறமான பறவைகள்
இச்சமயம் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.
கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய பரவைகளால் நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.
பொறாமைப் பேய் பிடித்தவர்கள் பிறருக்கு தீங்கிழைப்பதோடு தமக்கும் தீமையை உண்டாக்கிக் கொள்வார்கள்.
வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!
நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!
நமது வளர்ச்சிக்கு, உயர்ச்சிக்கு நாமே முயல்வோம்! அடுத்த சகோதரரின் முன்னேற்றத்தைக் கண்டு சந்தோஷப்படுவோம்! பொறாமையைக் கைவிட்டு பரந்து, விரிந்த மனத்துடன் வாழ்வோம்!
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார். அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது, அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார். மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடிமையே! நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன். நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை. அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார். அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12236, நஸாயீ)
பொறாமையின் இன்னொரு பக்கம். ‘நான்’ என்ற அகந்தை,
வாழ்ந்தவர் கோடி; மறைந்தர் கோடி; மக்கள் மனதில் நின்றவர் யார்?
அகந்தைதான் அழிவுக்கு அடிக்கல் என்று எத்தனையோ பேர் உலகில் தோன்றி பாடங்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பாவம் மனிதனின் மனம் திரும்பத் திரும்ப தவறுகள் இழைத்துக் கொண்டே இருக்கிறது.
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா
இதில் ஆறடி நிலமே சொந்தமடா” என்றார் உவமைக் கவிஞர் சுரதா |
Thursday, November 10, 2011
பொறாமையின் தீங்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment