கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி குறித்த உலக மாநாட்டில் கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன, அதாவது முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய கல்வியின் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டுமெனில், ‘மனித ஆத்ம சக்தி, அறிவாற்றல், பகுத்தறிவு, உணர்வுகள் மற்றும் நுண்ணறிவுகள் ஆகிய அனைத்தும் சமச்சீரான அளவில் அவனுடைய அல்லது அவளுமைடய ஆளுமைப் பண்பில் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது.
அவனுக்கு அல்லது அவளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியானது அவர்களை ஆத்ம ரீதியாக மார்க்கத்துடன் இணைத்து வைப்பதாகவும், இன்னும் அல் குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய மாண்புகளை விரும்பி ஏற்கக் கூடிய மனப்பக்குவத்தையும், இன்னும் தன்னை இந்தப் பூமிக் கோளத்தின் கலீபாவாக – பிரதிநிதியாக இறைவன் அனுப்பி இருக்கின்ற நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாகவும் அவர்கள் தங்களது வாழ்வில் மலர வேண்டும்.
நம்முடைய குழந்தைகள் தலைமைத்துவத்திற்கான ஆளுமைப் பண்புகளைப் பெற்றிருக்க வேண்டுமே ஒழிய, ஏனைய இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகளை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுபவர்களாக இருத்தல் கூடாது. தங்களது கல்வி, அறிவு, ஞானம், பண்புகள் மற்றும் நேர்மறையான செயல்பாடுகள் மூலம் அவர்கள் சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒளி விளக்குகளாகப் பரிணமிக்க வேண்டும். இளைய சமுதாயத்தின் தன்மைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்றால், அவர்கள் திருமறைக் குர்ஆனை நேரடியாகக் கற்று விளங்கி, அதன் மூலம் தங்களது வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை அதன் ஒளி கொண்டு தீர்வு தேடிக் கொள்வதன் மூலம் அடையப் பெற முடியும் என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றார்கள்.
இத்தகைய தலைமைத்துவப் பண்புகளுக்கு உரித்தானவர்களாக நம்முடைய குழந்தைகளை மாற்றுவதற்குண்டான பயிற்சிக் கையேட்டை இன்னும் நம்முடைய சமுதாயம் தயாரிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார். மகிழ்ச்சிகரமான குடும்பம், அமைதியான, பாதுகாப்பான, அன்பான வாழ்க்கையை வழங்குவதுடன், இன்னும் நல்ல கல்வியை அவர்களுக்கு வழங்குவதும் பெற்றோர்கள் மீதுள்ள கடமையாக இருக்கின்றது.
எவரொருவர் குழந்தைகள் மீது இரக்கம் கொண்டவராக இல்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். இன்னும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வழங்குகின்ற அறிவுரைகளில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமும், மற்றும் பண்பாடுகளும் தான். முஸ்லிம் குழந்தைகள் தங்களுக்கான இஸ்லாமிய விழுமியங்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்றார் உறவுகள், நண்பர்கள், மற்றும் சூழ்நிலைகளிலிருந்தும் பெற்றுக் கொள்கின்றன. இளமையில் கல்வி தான் மிகச் சிறந்தது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழிக்கேற்ப, இரும்பு பழுக்கக் காய்ச்சி இருக்கும் நிலையில் தான் அதனை விரும்பிய வகையில் வளைக்க முடியும். இதுவல்லாத நிலையில், முஸ்லிம் குழந்தைகள் விரும்பத்தகாத பழக்கங்களையும், மாற்றுப் பண்பாடுகளையும் பெற்றுக் கொண்டு, பெற்றோர்களுக்கும், முஸ்லிம் உம்மத்திற்குப் பிரச்னைக்குரியதாக மாறி விடுவதோடு, அந்தக் குழந்தை நல்லதொரு உம்மத்தாக மாறுவதும் கடினமாகி விடும்.
குழந்தைகளுக்குக் கல்வியை வழங்குவதன் கடமையில் முதல் நிலையில் உள்ளவர்கள் பெற்றோர்கள். குழந்தையின் ஆரம்பகால இளமைப் பருவத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற கல்வி அறிவு+ட்டல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வி கற்றல் என்பது அதன் வாழ்வின் முதல் நாளிலிருந்து, அது மரணமடையும் வரைக்கும் தொடர்கின்றது. அதன் முதல் நடவடிக்கையாக ஒவ்வொரு இரவிலும் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளுடன் நிறைவேற்றுபவர்களாக பெற்றோர்கள் இருத்தல் வேண்டும்.
இஸ்லாமியச் சூழ்நிலைகளையும், இஸ்லாமிய பண்பாடுகளையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கடமை பெற்றோர்களைச் சார்ந்தது. இஸ்லாத்திற்கு முரணானவற்றைப் பெற்றோர்கள் செய்து கொண்டு, பிள்ளைகள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் வளர வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு. குழந்தைகளுக்கு அழகிய முன்மாதிரிகளாக முதலில் பெற்றோர்கள் தான் திகழ வேண்டும். பெற்றோர்களைப் பார்த்துத் தான் பிள்ளைகள் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றன, இன்னும் பெற்றோர்களது பழக்க வழக்கங்களை அடிப்படையாகவும் கொண்டு தான் அவை வளரவும் ஆரம்பிக்கின்றன.
குழந்தைகள் வளர வளர அதன் ஒழுக்க மேம்பாட்டில் பெற்றோர்கள் தவிர, இன்னும் ஆசிரியர்கள், சமூகத்தில் உள்ள மூத்தவர்கள், நண்பர்கள் ஆகியோர் மிகவும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தோதான பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்தல் வேண்டும்.
இன்றைய நவீன உலகில் ஆடியோ, வீடியோ, டிஷ், வீடியோ கேம்ஸ், படங்கள், தொடர்கள், கார்ட்டூன்கள் போன்றவை, அதன் ஆளுமையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வல்லவைகளாக இருக்கின்றன, இன்னும் இஸ்லாமிய பண்பாட்டில் ஓட்டையை ஏற்படுத்துகின்றன என்பதால், பெற்றோர்கள் குழந்தைகளின் ஆளுமையில் இஸ்லாத்திற்கு முரணான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பது அவசியமாகும். இது ஒன்றும் இன்றைக்கு செய்து விட்டு நாளைக்கு விட்டு விடுகின்ற வேலையும் அல்ல, இன்னும் சமூகத்தில் ஒரு சிலரது கடமையுமல்ல. மாறாக, மொத்த சமூகமும் இது விஷயத்தில் தொடர் கவனத்தைச் செலுத்த வேண்டியதுள்ளது. அவ்வாறில்லா விட்டால், இன்றைய குழந்தைக் குற்றவாளிகள் அட்டவணையில் உங்களது குழந்தையும் இணைந்து விட வாய்ப்புள்ளது.
இஸ்லாமியக் கல்வியை நாம் ஏன் ஊட்ட வேண்டும் என்கிறோம் என்றால், இன்றைய நவீன நாகரீக உலகில் பள்ளிக் கூடங்கள் கூட தீவிரவாதப் பாசறைகளாக மேலைநாடுகளில் மாறி விட்டன, மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் துப்பாக்கி சகிதங்களுடன் பள்ளிக் கூடங்களுக்கு வருகின்றன, சக தோழர்களைச் சுட்டுக் கொன்று சந்தோஷமடைகின்றன, தாங்கள் பார்த்த படத்தைப் போலவே தாங்களும் ஹீரோக்களாக மாற முயற்சி செய்கின்றன, இத்தகைய இழிநிலைகள் முஸ்லிம் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது. அதுவன்றி மொத்த சமூகமும் இஸ்லாத்தினால் பயனடைய வேண்டும் என்பதற்காகவே குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதின் நோக்கமாகும். இஸ்லாமிய அறிவூட்டலுக்குப் பின்னர் பள்ளிக் கூடங்களைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் கல்லூரிக்குள்ளும் அடியெடுத்து வைக்க வேண்டும்.
கல்வி அறிவைத் தேடுவதிலும், அதனை வளர்த்துக் கொள்வதிலும் முஸ்லிம் சமூகமும் இனியும் பொடுபோக்காக இருக்க முடியாது. அது முன்னணியில் இருந்தாக வேண்டும். இன்னும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும், வயது வித்தியாசமின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு துறைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள அவர்கள் விரைய வேண்டும். இணையத் தளங்கள் இன்றைக்கு கல்வி அறிவை மிக விரைவாகத் தரக் கூடிய சாதனமாக இருக்கின்றது. பள்ளிக்கூட வகுப்பறைகள், நூல் நிலையங்கள், மற்றும் இன்றைய உலகில் மனிதர்கள் அதிகம் வந்து போகக் கூடிய இடங்களில் கூட நூல்களும், இன்னும் அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
மேலைநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளை எத்தகைய பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது என்பது குறித்த தடுமாறுகின்றனர். எப்படிப்பட்ட பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சுதந்திரம் பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் தேர்வு செய்யும் பள்ளிக் கூடங்கள், கல்வியறிவை நல்ல முறையில் வழங்கக் கூடியதாகவும், இன்னும் ஒழுக்கமாண்புகளை விதைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
மேலைநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்களது குழந்தைகளை எத்தகைய பள்ளிக் கூடங்களில் சேர்ப்பது என்பது குறித்த தடுமாறுகின்றனர். எப்படிப்பட்ட பள்ளிக் கூடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சுதந்திரம் பெற்றோர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் தேர்வு செய்யும் பள்ளிக் கூடங்கள், கல்வியறிவை நல்ல முறையில் வழங்கக் கூடியதாகவும், இன்னும் ஒழுக்கமாண்புகளை விதைக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
நன்றி-தேன்துளி