! |
ஒரு குவளை நீரின் விலை!
மனிதர்கள் தாங்கள் எவ்வளவு பலகீனமானவர்கள், இறைவன் எவ்வளவு வலிமையுள்ளவன் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான்: ‘மனிதன் மிகவும் பலகீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்’.
இராக்கின் பக்தாதை தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்த, வரலாற்றில் தனியிடம் பெற்ற மாமன்னர் ஹாரூன் ரஷீது கல்விக்கும், ஞானத்திற்கும் அதிக மதிப்பளித்தவர் என்பது உலகம் அறியும். அவரது அவையில் அறிஞர்களுக்குப் பஞ்சமிருக்காது.
ஒருமுறை மன்னர், இப்னு ஸமாக் எனும் பேரறிஞருடன் உரையாடிக்கொண்டிருந்தார். உரையாடலின் இடையே தாகமெடுத்ததால் நீர் அருந்தும் ஆவலில் தண்ணீர் கொண்டுவரும்படி பணியாளரிடம் உத்தரவிட்டார். பணியாள் நீர் நிரம்பிய குவளையை மன்னரின்முன் கொண்டு வந்து வைத்தான். மன்னர் குவளையை வாயினருகே கொண்டு சென்றபோது இப்னு ஸமாக், ‘அமீருல் முஃமினீன் (விசுவாசிகளின் தலைவர்) அவர்களே! சிறிது பொறுங்கள்’ என்றார். மன்னர் அறிஞரை கேள்விக்குறியோடு பார்த்தார்.
‘உங்களைவிட பலமிக்க சக்தி உங்களுக்கு தண்ணீர் வருவதைத் தடுத்துவிடுமெனில் இந்த ஒரு குவளை நீருக்காக இறுதியாக என்ன விலை தந்து பெறுவீர்கள்?’
ஹாரூன் ரஷீத் சொன்னார்: ‘என் அரசாங்கத்தின் பாதியளவைத் தந்தேனும் அக் குவளை நீரைப் பெறுவேன்’.
‘சரி! இறைவன் தங்கள் மீது பூரண அருளைச் சொரியட்டும். இப்போது தண்ணீரை அருந்துங்கள்’ என்றார் அறிஞர் இப்னு ஸமாக்.
மன்னர் நீரருந்தி முடித்தார். இப்போது இப்னு ஸமாக் மீண்டும் கேட்டார்: ‘தற்போது நீங்கள் அருந்திய தண்ணீர் வெளியில் வரும் சிறுநீர்ப் பாதையில் தடை ஏற்பட்டு சிறுநீர் வராமல் போனால், சிறுநீர் வருவதற்கு தாங்கள் அதிகபட்சம் எவ்வளவு செல்வத்தைச் செலவழிப்பீர்கள்?’
மன்னர் சொன்னார்: ‘எனது அரசாங்கம் முழுவதையும் கூட அதற்காகச் செலவு செய்ய தயாராகிவிடுவேன்’.
புன்னகைத்த அறிஞர், ‘எந்த அரசாங்கத்தின் மதிப்பு ஒரு குவளை நீரின் மதிப்பைக்கூட அடையவில்லையோ, அந்த அரசாங்கத்திற்காகவும், ஆட்சிக்காகவும் மனிதர்கள் தமது சகோதரர்களுடன் கூட மோதத் தயாராகி விடுகிறார்களே! அதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா?’
இதைக் கேட்டதும் மன்னர் அழ ஆரம்பித்துவிட்டார். மனிதர்களுக்கு தங்களது பலவீனங்களைப் பற்றிய நினைவுகளே வருவதில்லை. தங்களை அதிபலசாலியாகவே எண்ணிக் கொண்டிருக்கிறனர். மனிதனுடைய சாதனைகள் அத்தனையும் இறைவனுடைய ஆற்றலுக்குமுன் ஒரு அணுகூட இல்லை. மனிதன் அதை சாதித்தேன், இதை சாதித்தேன் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
உதாரணத்திற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோமே! தரையில் செல்லும் வாகனங்களைக் கண்டுபிடித்தோம், வானில் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்தோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறான். வாகங்கள் - அது சைக்கிளாக இருந்தாலும், காராக இருந்தாலும், பஸ்ஸாக இருந்தாலும், லாரியாக இருந்தாலும் சக்கரத்தின்; சுழற்சி மூலமாகவே ஓடுகிறது. விமானம் ஆகாயத்தில் பறந்தாலும், அதற்கும் டயர் உண்டு! டயர் நகராமல் விமானம் ஆகாயத்தில் எழும்பமுடியாது. ஆக எவ்வளவு செலவு செய்து வாகனத்தை உருவாக்கினாலும் அதற்கு டயர் தேவை. அதே சமயம் அந்த டயருக்குள் நிரப்பப்பட்டிருப்பதோ காற்று மட்டுமே! அந்த காற்று நிரப்பப்படவில்லயென்றால் அது துளிகூட அசையாது.
ஆக, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து வாகனத்தை உருவாக்கினாலும் காற்றில்லாமல் எவ்வித பயனுமில்லை. அதே சமயம் அந்த காற்றுக்கு ஏதேனும் விலையுண்டா? இறைவன் அதை இலவசமாக அல்லவா வழங்கியிருக்கிறான்!
ஆக, விலையுயர்ந்த மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே இறைவனின் ஆற்றலுக்குமுன் ஒன்றுமே இல்லை, இறையுதவியில்லாமல் மனிதனால் எதையும் சாதிக்க முடியாது, இறைவனின் படைப்பிலுள்ள எதையுமே மனிதன் சாதாரணமாக நினைத்துவிட முடியாது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளங்கிக் கொள்ளும்போதுதான் இறைவன் தனது படைப்பினங்களுக்கு வழங்கியிருக்கும் மகத்தான அருட்கொடைகளைப் பற்றி எண்ணியெண்ணி வியந்து அவனுக்கு அதிகமதிகமாக நன்றி பாராட்டும் பண்பும் உயிரோட்டமுள்ள இறைவழிபாடும் நம்மில் உருவாகும். சிந்திப்போமா?
நன்றி-நிடூர்.கம
|
No comments:
Post a Comment