முகஸ்துதி
அவர்கள் (நயவஞ்சவர்கள்) தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள். அவர்கள் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (அல்குர்ஆன் 4:142)
இவ்வுலகில் புகழுக்கும், முகஸ்துதிக்கும் அடிமையாகதவர்கள் மிகக் குறைவு. பிறர் தன்னை புகழ்வதை சிறு பிள்ளையும் விரும்புகிறது. தான் செய்த சேவையைப் போற்றி புகழ்ந்துரைப்பதை பெரியவர்களும் எதிர்பார்க்கின்றனர். தாம் தர்ம சீலன் என்று ஏழைகளின் வாய் சொல்லாதா? என செல்வந்தர்கள் ஆசைப்படுகின்றனர். மக்களின் தலைவர், பொதுநல வீரர் என்று தன்னை மக்கள் புகழ மாட்டார்களா? என்று அரசியல்வாதிகள் அலைகிறார்கள். உபதேசம் செய்யும் அறிஞர்கள் பிறர் தம்மை புகழ வேண்டும் என்றும், விஞ்ஞானி தான் கண்டுபிடித்த நூதன கருவியின் மூலமும், எழுத்தாளர் தன் எழுத்து வன்மை மூலமும், பிறர் புழந்துரைப்பதை விரும்புகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு துறையிலும், உயர்ந்நதிருப்பவர்கள் தங்கள் செயல்திறனுக்காக இந்த உலகம் புகழ வேண்டும் என்பதை தினமும் எதிர்பார்க்கின்றனர். பிறரின் புகழுக்காகவும், முகஸ்துதிக்காகவும் செய்த நற்செயல்கள் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது பழைய கந்தல் துணியை போன்று மதிப்பதற்காக ஆகிவிடும்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் '' யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாள்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன்.
(அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-6499)
தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக!
இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நாள், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கள் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும். (அறிவிப்பவர்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-4919)
இறைதூதரின் எச்சரிக்கை:
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான். நான் இணை வைப்பவர்களை விட்டும் இணைவைப்பதை விட்டும் அறவே தேவையற்றவன். எவரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும் அவனது இணைவைப்பததையும் (தனியே) விட்டு விடுவேன்.'
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரளி) புகாரி-5708
எந்த மனிதர் பெயருக்காகவும், புகழுக்காகவும் நற்செயல் புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் இவ்வுலகில் அந்த பெயரையும் புகழையும் வழங்கி விடுவான். மறுமையில் எந்த பலனும் அவருக்கு கிடையாது என்பது திருமறையின் கூற்று.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
'எவர் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றாரோ நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். அவனுக்கு மறுமையில் எவ்வித பாக்கியமுமில்லை.'' (அல்குர்ஆன் 42:20)
தாம் செய்கின்ற எந்த செயலையும் அல்லாஹ்வின் உவப்பைப் பெற வேண்டும். அதை விடுத்து அல்லாஹ் அல்லாதவரின் நெருக்கத்தை பெற வேண்டும் என நாடி நற்செயல் ஒன்றை ஒருவர் செய்தால் அது மறைமுகமான இணை வைப்பாகி விடும். அல்லாஹ்வை வைக்க வேண்டிய இடத்தில் மற்றவரை வைப்பதானது இணைவைப்பாகும். அந்த செயலுக்கு அல்லாஹ்விடம் எந்த பயனும் கிடைக்காது என்பதுடன் குற்றவாளியும் ஆவார்.
மனிதர்களே! சிறிய இணை வைத்தல் பற்றி உங்களை எச்சரிக்கிறேன் என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதும், நாயகமே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் வினவினர். ஒருவர் தொழுகிறார். மக்கள் தன்னைப் பார்த்து புகழ்ந்திட வேண்டும் என்பதற்காக முயற்சித்து தன் தொழுகையை அழகாக்குகிறார். இதுவே சிறிய இணைவைத்தலாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: மஹ்மூத் பின் லுபைத் (ரளி) நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்கீப் -28 இப்னு குஸைமா
அபூ மூஸா அல்அஷ்அரீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார். மற்றொருவர் தமது திறமையை பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். இவர்களில் எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் என்று வினவினார். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காக போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவராவார் என்பதாக பதிலளித்தார்கள். (புகாரி-2810, முஸ்லிம்-3862)
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, ''அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ''(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.
இறைவன், ''(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்'' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு ''அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், ''(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ''(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்'' என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்'' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, ''அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், ''நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், ''(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்'' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (3865)
ஜுப்புல் ஹுஹஸனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் நாயகமே! ஜுப்புல் ஹுஹஸன் என்றால் என்ன? என்று வினவினர். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் அது நரகத்தில் உள்ள ஒரு ஓடையாகும். அதை விட்டும் நரகத்தின் பிற பகுதிகள் ஒவ்வொரு நாளும் நூறு முறை பாதுகாவல் தேடுகிறது என்று கூறினார்கள். நாயகமே! அதில் எவர் புகுவர்? என்று வினவப்பட்டதற்கு அவர்கள் (பிறரிடம் காட்டுவதற்காக) குர்ஆன் ஓதுபவர்கள் மற்றும் நற்செயலாற்றுபவர்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுiரா (ரளி) நூல்: திர்மிதி 2383
தனது பொருட்களை செலவழித்து விட்டு மக்களிடம் பெயரும் புகழையும் எதிர்பார்ப்பவர்களும் உண்டு. தனது பொருட்களை எதற்காகவும் செலவழிக்காமல் வெட்டி பந்தா செய்து கொண்டு மக்களிடம் பெயரும் புகழும் எதிர்பார்ப்பவர்களும் உண்டு.
'இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தை செலவு செய்தவனைப் போன்று (தர்மம்) செய்ததைச்) சொல்லிக் காட்டியும் (மனத்தை) புண்படுத்தியும் உங்களுடைய தர்மத்தைப் பாழாக்கி விடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 2:266)
மனிதர்களுக்கு காண்பிப்பதற்காக தர்மம் செய்பவர் வெளிப்படையில் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வதைப் போன்ற தோற்றத்தை மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவார். உண்மையில் மனிதர்கள் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தர்மம் செய்வார்.
இறைநம்பிக்கையில் பலவீனம்
முகஸ்துதி ஏற்படுவதற்கான அடிப்படைக்காரணம் இறைநம்பிக்கையில் ஏற்படும் பலவீனம் ஆகும். அல்லாஹ்வின் மீது ஒருவனுக்கு உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதை விட மக்களின் அபிமானத்;தைப் பெறுவதே அவனுக்கு பெரிதாக தோன்றும். இறைநம்பிக்கையில் ஏற்படும் இந்த பலவீனத்தின் விளைவாக மறுமையில் கிடைக்கும் வெகுமதிகளை அவன் புறக்கணிக்கிறான். இதே நேரத்தில் இந்த உலகில் கிடைக்கும் புகழுக்காக அவனது எண்ணம் அலை பாய்கின்றது. இத்தகைய எண்ணமே முகஸ்துதியில் அவனை வீழ்த்துகிறது.
நபி (ஸல்) 'எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தேடப்படும் கல்வியை உலகப் பொருட்களை அடைந்து கொள்வதற்காக கற்றுக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் சொர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார். (நூல்: அபூதாவூத் 3664)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எவர் கற்றோருடன் மோதுவதற்காகவும், அறிவீனர்களுடன் வாதம் புரிவதற்காகவும், மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதற்காகவும் எவர் கல்வி கற்கின்றாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பான்'' (நூல்: திர்மிதி 2654)
முகஸ்துதியில் இருந்து தற்காத்துக்கொள்ளும்முறை
நற்செயல்களின் பலன்களை அழிப்பதற்கு ஷைத்தான் முகஸ்துதியை ஆயுதமாக பயன்படத்துகிறான். கண்ணுக்குப் புலப்படாத ஷைத்தானின் ஆயுதத் தாக்குதலிருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு ஒரே வழி இறைவனிடம் சரணடைந்து அவனிடம் நம் இயலாமையை எடுத்துரைப்பதேயாகும். அதற்காகத் தான் அண்ணல் நபி ஸல் அவர்கள் 'ஒவ்வொரும் தன்னை முகஸ்துதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ள இரவிலும் பகலிலும் கீழ்காணும் பிரார்த்தனையை ஓதி வாருங்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னா நஊது பிக மின் அன் நுஷ்ரிக ஷைஅன் நஃலமுஹு வநஸ்தஃக்பிருக லிமாலா நஃலமுஹு.
இறைவா! நாங்கள் அறிந்து உனக்கு இணை வைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றோம். அறியாமல் செய்வதை விட்டு உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம்.
அறிவிப்பாளர்: அபூ மூஸா ரளி நூல்: ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 33 அஹ்மத்)
மார்க்கச் சட்டங்களை அறிந்து தனது அனைத்து செயல்களிலும் முகஸ்துதியிலிந்து விலகி அல்லாஹ்தஆலாவின் உவப்பை மட்டுமே இலட்சியமாக எண்ணி செயல்படும் பேணுதல் உள்ள இறை நம்பிக்கையாளனாக இறைவன் நம்மை திகழச் செய்வானாக! ஆமீன்!
No comments:
Post a Comment