இஸ்லாத்தில் சுத்தம் என்பது தொழுதல், குர்ஆன் ஓதுதல், தவாஃப் செய்தல் போன்ற அமல்களுக்காக மட்டும் வலியுறுத்தப் படவில்லை. எல்லா நேரங்களிலும் தானும் சுத்தமாக இருப்பதுடன் சுற்றுப்புற சுழ்நிலைகளையும் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவ்வாறு தம்மையும் சமூகத்தையும் தூய்மை பெறச் செய்வதில் மிஸ்வாக் என்னும் பல் துலக்குதல் பெரும் பங்கு வகிக்கிறது.
அல்லாஹ் கூறும் மிஸ்வாக்
"இன்னும் இப்ராஹீமை அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் (என்பதையும் நினைவு கூறுங்கள்) (அல்குர்ஆன் 2:142)
இந்த வசனத்தில் வரும் 'கலிமாத்' (கட்டளைகள்) என்ற அரபிப் பதத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர் ஹள்ரத் தாவூஸ் (ரஹ்) அவர்கள் "அக்கட்டளைகள் 10 என்றும் அவற்றில் மிக முக்கியமானது மிஸ்வாக் என்றும் கூறுகிறார்கள்.
அனைத்து நபிமார்களின் சுன்னத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "4 செயல்கள் அனைத்து நபிமார்களின் சுன்னத்தாகும். 1) கத்னா செய்வது 2) நறுமணம் பூசுவது 3) மிஸ்வாக் செய்வது 4) திருமணம் முடிப்பது. (நூல்: இப்னு அபீ ஷைபா)
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பர்ளாக்கப்பட்ட மிஸ்வாக்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "வித்ரு தொழுவது, தஹஜ்ஜத் தொழுவது, மிஸ்வாக் செய்வது ஆகியவை உங்களுக்கு சுன்னத்தாகவும் எனக்கு ஃ பர்ளாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஹதீஸில் "ஆரம்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (அவர்கள் உளூவுடன் இருப்பினும்) ஒவ்வொரு தொழுகைக்கும் உழு செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது. சில சமயங்களில் அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போது அச்சட்டம் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக மிஸ்வாக் செய்வதைக் கடமையாக்கப்பட்டது. (நூல்: அபூதாவூத்)
தூங்கும் முன்....
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் தூங்குவதற்காக வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக மிஸ்வாக் செய்வார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத் )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ஒருமுறை நான் என்னை மிஸ்வாக் செய்பவனாக கனவில் கண்டேன். என்னருகில் ஒரு சிறியவரும் பெரியவரும் இருந்தனர். அவர்களில் நான் சிறியவனுக்கு மிஸ்வாக்கைக் கொடுத்த போது கொடுக்கவும் என்று அறிவிக்கப்பட்டது நானும் அவ்வாறே செய்தேன். (நூல் : புகாரி )
நடு இரவிலும்..
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவு தங்கினேன். இரவின் நான்கு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழித்தார்கள். நான்கு முறையும் மிஸ்வாக் செய்தார்கள். (நூல்: அபூதாவூத்)
விழிக்கும் பொழுது.....
இரவிலோ பகலிலோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கி எழுந்ததும் உளூ செய்வதற்கு முன் மிஸ்வாக் செய்வார்கள். (நூல்: அபூதாவூத்)
சுய தேவைக்கு முன் ...
இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் தண்ணீரும் மிஸ்வாக்கும் வைக்கப்பட்டிருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது விழிப்பார்களோ தனது சுய தேவையை முடித்தப்பின் மிஸ்வாக் செய்வார்கள். (நூல்: அபூதாவூத்)
சாப்பிடும் முன்பும் பின்பும் .....
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு மிஸ்வாக் செய்வதை மிகவும் வலியுறுத்தியதிலிருந்து நான் தூங்கும் போதும் விழித்த பின்பும் சாப்பிடும் முன்பும் பின்பும் மிஸ்வாக் செய்வதை நான் தவறாமல் கடைபிடித்து வந்தேன். (நூல்: மஜ்மஃ )
வீட்டில் நுழையும் போது...
ஹள்ரத் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டில் நுழைந்ததும் செய்யும் முதல் எது? என்று அன்னை ஆயிஷா (ரலி)அவர்களிடம் கேட்ட போது "மிஸ்வாக்" என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
வீட்டிலிருந்து வெளியேறும் போது...
ஹள்ரத் ஜைத் பின் காலித் ஜுஹ்னீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது வீட்டிலிருந்து தொழுகைக்காக வெளியேறுவார் களோ மிஸ்வாக் விட்டுத்தான் வெளியேறுவார்கள். (நூல்: அத்தர்கீப்)
குர்ஆன் ஓதுவதற்காக......
ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; "உங்கள் வாய் குர்ஆனின் பாதைகள். எனவே மிஸ்வாக் செய்வதின் மூலம் அதை சுத்தமாக வைத்திருங்கள். (நூல்: இப்னு மாஜா)
தொழுகைக்கு முன்....
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்திற்கு சிரமம் ஏற்படும் என்ற பயம் எனக்கு இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் மிஸ்வாக் செய்வதை நான் வலியுறுத்தியிருப்பேன். (நூல்: முஸ்லிம்)
ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும்....
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபி ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்தாக தஹஜ்ஜத் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் மிஸ்வாக் செய்வார்கள். (நூல்: அத்தர்கீப்)
70 மடங்கு நன்மையாகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “மிஸ்வாக் செய்து தொழப்பட்ட தொழுகை மிஸ்வாக் அன்றி தொழப்பட்ட தொழுகையை விட 70 மடங்கு சிறந்தது. (நூல் : மிஷ்காத்)
அடிக்கடி மிஸ்வாக் செய்வது
ஹள்ரத் யஜீத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி ஹள்ரத் மைமூனா (ரலி) அவர்களின் பாத்திரத்தின் மீது எப்பொழுதும் மிஸ்வாக் வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அடிக்கடி மிஸ்வாக் செய்வார்கள். (நூல் : மஜ்மஃ)
பற்கள் இல்லாதோருக்கும் மிஸ்வாக்
ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “பற்கள் இல்லாதவர் மிஸ்வாக் செய்ய வேண்டுமா? என்று நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “அவர்கள் எந்த முறையில் மிஸ்வாக் செய்ய வேண்டும்” என்று கேட்டதற்கு “அவர்களின் விரல்களால் செய்து கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள். (நூல் : சுனனுல் குப்ரா)
பிரயாணத்திலும் மிஸ்வாக்
ஹள்ரத் உம்மு தர்தா (ரலி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணம் புறப்படும் முன் தாங்கள் முக்கியமாக எதையெல்லாம் எடுத்து வைப்பீர்கள்” என வினவியதற்கு “எண்ணெய், கண்ணாடி, சீப்பு, கத்தரிக்கோல், சுர்மா குடுவை,மிஸ்வாக்” என பதிலளித்தார்கள். (நூல் : மஜ்மஃ)
மிஸ்வாக் வைத்திருந்த இடம்
ஹள்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எழுத்தாளர் காதில் பேனா வைக்குமிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்வாக்கை வைத்திருப்பார்கள். (நூல் : கதீப்)
இந்த அறிவிப்பின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் மிஸ்வாக்கை உடன் வைத்திருப்பார்கள் என்று விளங்குகிறது.
மரணத்தருவாயிலும் மிஸ்வாக்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணத்தறுவாயில் இருக்கும் பொழுது அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் மிஸ்வாக் இருப்பதைக் கண்டு அதை தனக்களிக்கும்படி சைக்கினை செய்தார்கள். நான் அதை என் வாயில் வைத்து, மென்று மிருதுவாக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுத்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்வாக் செய்தார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புஹாரி)
கலிமா ஞாபகம் வருகிறது
அல்லாமா முல்லா அலி காரீ (ரஹ்) கூறுகிறார்கள்: “மிஸ்வாக் செய்வதால் 70பிரயோஜனங்கள் உள்ளது. அவைகளில் மிக உயர்ந்தது மரண தறுவாயில் கலிமா ஞாபகம் வருவதாகும்!
மரணத்தைத் தவிர அனைத்திற்கும் மருந்து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மிஸ்வாக் செய்வது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணமளிக்கிறது, (நூல்: கன்ஜூல் உம்மால்)
மிஸ்வாக் உபயோகிக்கும் சுன்னத்தான முறைகள்
* அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “கட்டை விரலும், சுண்டு விரலும் மிஸ்வாக்கிற்கு கீழ் பக்கமாகவும் மற்ற விரல்கள் மேல் பக்கமாகவும் இருப்பது மிஸ்வாக் பிடிப்பதற்கான சுன்னதான முறையாகும். (நூல்:ஷாமி)
* மிஸ்வாக் குச்சியின் இரு பக்கமும் உபயோகிக்காமல் ஒரு பக்கம் சீவி வைத்து மிருதுவாக்கி மிஸ்வாக் செய்ய வேண்டும்.
* பற்பொடி, பற்பசை உபயோகிப்பது அதில் ஹராமான பொருள் கலக்காத பட்சத்தில் ஆகுமானதாகும். ஆனால் மிஸ்வாக்கின் நன்மை கிடைக்காது! எனவே மிஸ்வாக் செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஆரம்பத்தில் மிஸ்வாக் ஒரு ஜான் அளவு இருக்க வேண்டும். தொடர் உபயோகத்தின் மூலம் அளவு குறைவதால் பரவாயில்லை.
* மிஸ்வாக் குச்சி இல்லாதபட்சத்தில் விரல்மூலம் மிஸ்வாக் செய்ய வேண்டும். மிஸ்வாக்கை உபயோகப்படுத்திய பின் கழுகி நிறுத்தி வைக்கவேண்டும்.
* கழிப்பிடங்களில் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ் ஆகும்.
* குளிக்கும் பொழுது மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும்.
* மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அனைத்து குச்சிகளைக் கொண்டும் மிஸ்வாக் செய்வது ஆகுமானதாகும். எனினும் சிறந்தது அராக் என்னும் மிஸ்வாக் மரக்குச்சி, அதற்கு பிறகு ஷைத்தூன் மரக்குச்சியாகும்.
* விஷத்தன்மை கொண்டவை மூலம் மிஸ்வாக் செய்வது ஹராமாகும்.
* மிஸ்வாக் செய்யும் பொழுது, “இறைவா! என் வாயை சுத்தப்படுத்துவாயாக! எனது உள்ளத்தை ஒளியாக்குவாயாக! எனது உடலை சுத்தப்படுத்து வாயாக! நரகத்தின் மீது என் உடலை ஹராமாக்குவாயாக” என்ற துஆவை ஓத வேண்டும்.
மிஸ்வாக் பற்றி விஞ்ஞானம் கூறுவதென்ன
* நவீன ஆய்வின் படி PLAZMA (பிளாஸ்மா) எனும் கிருமிகள் வெறுமனே வாய் கொப்பளிப்பதால் அழிவதில்லை. எனவே இரவில் படுக்கைக்கு செல் லும் முன் கண்டிப்பாக மிஸ்வாக் செய்ய வேண்டும். ஏனெனில் மனிதனின் வாய் மூடியிருக்கும் இரவு சமயங்களில் தான் றிலிகிஞீவிகி வேலை செய்து பற்களை பழுதாக்குகிறது.
* மிஸ்வாக் செய்வதால் வாயில் ஒரு விதமான எச்சில் ஊறுகிறது. அதனால் உச்சரிப்பு தெளிவாகி ஓதுவது இலகுவாகிறது.
* பற்களுக்கும், ஈறுகளுக்கும் மிக உறுதியளித்து அதன் நோய்களை மிஸ்வாக் நீக்குகிறது.
* பலவிதமான உயர்தர பற்பசைகளை உபயோகித்தும் வாய் வாடை நீங்காத ஒருவருக்கு மிஸ்வாக்கை தொடர்படியாக செய்வதின் மூலம் நிவாரணம் கிடைக்கிறது.
* இருதயக் குழாய்கள் பழுதடைவதற்கு ஈறுகளின் நரம்புகள் பழுதடைவதே காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு அந்நோய் தாக்கிய ஒருவருக்கு மிஸ்வாக்கின் மூலம் நிவாரணமளிக்கப்பட்டது.
* பற்கள், ஈறுகள் பழுதடைவதால் மூளை, காது, கண்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைந்து அவ்வுறுப்புகள் பழுதடைகிறது. இதற்கு மிஸ்வாக் சிறந்த நிவாரணியாகும்.
* நாவில் சுவைக்கும் திறன் இல்லாதவர்களுக்கும் மிஸ்வாக் சிறந்த மருந்தாக பயன்பட்டுள்ளது.
* TONSILS எனப்படும் தொண்டை நோயுள்ளவர்கள் மிஸ்வாக் செய்வதின் மூலம் நிவாரணம் பெற்றுள்ளார்கள்.
* அதிகமான தலைசுற்றல், ஒற்றைத் தலைவலிக்கு மூளை சிகிச்சை நிபுணர்(BRAIN SPECIALIST) கள் மருத்துவம் செய்தும் குணமாகாத போது மிஸ்வாக் கின் மூலம் சிறந்த நிவாரணம் கிடைத்துள்ளது.
* நெஞ்சு சளி, பித்தம், சைனஸ் போன்ற நோய்களை மிஸ்வாக் விரைவில் குணமாக்குகிறது.
* மிஸ்வாக் செய்வதை விட்டதிலிருந்து தான் Dental Surgeon எனும் பற்களின் அறுவை சிகிச்சை முறை ஆரம்பமானது. ஆக எல்லா நோய்களுக்கும் மருந்தாக மிஸ்வாக் உள்ளது. (நூல் : சுன்னத்தே நபவி அவ்ர் ஷதீத் சைன்ஸ்)
நவீன விஞ்ஞானத்தின் பிரயோஷனங்களும் மேலே கூறப்பட்டுள்ளன. நாம் நபியின் சுன்னத் என்ற நோக்கில் பின்பற்ற வேண்டும். விஞ்ஞானத்தை அல்ல! ஏனெனில் மனிதனின் அறிவு அழிந்துவிடக் கூடியது. இறைவனின் கட்டளை நிரந்தரமானது. எனவே, இவ்வளவு சிறப்புகள் ஒருங்கே பெற்ற மிஸ்வாக்கினை தொடர்ந்து செய்து ஈருலக பேற்றுகளை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.
நன்றி: யூசுப் காசிபி
No comments:
Post a Comment